ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் உலகின் உயரமான செனாப் நதி ரயில்வே வளைவு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் கத்ரா – ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார். முன்னதாக செனாப் பாலத்தில் நடந்து சென்று ஆய்வு செய்தார் பிரதமர் மோடி. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் லிங் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2002ம் ஆண்டு செனாப் நதி ரயில்வே வளைவு பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்த ரயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இந்த செனாப் நதி ரயில்வே வளைவு பாலம் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை விடவும் உயரமானது. 30,000 மெட்ரிக் டன் எஃகு தளவாடங்களால் உருவாக்கப்பட்ட இந்த பாலம், இந்திய ரயில்வே உட்கட்டமைப்பின் மிகப்பெரிய மைல் கல்லாகவும் மாறி உள்ளது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவிற்கு நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்ட இந்த பாலம், 260 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசினாலும் அசையாது. இந்த பாலம் சுமார் 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என பொறியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையேயான பயண நேரத்தில் சுமார் 3 மணி நேரத்தை குறைக்கும்.