சென்னை: பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரியில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடந்தது. தொடர்ந்து, ஆசிய கோப்பை ஹாக்கி, கார் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடந்தன. மேலும், இந்த ஆண்டு மீண்டும் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற உள்ளது.
இந்நிலையில்தான் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்து இருந்தார். இதையடுத்து விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் நடந்தன. அதில் செம்மஞ்சேரி, வண்டலூர், குத்தம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நீர்வளத் துறை இணைந்து இதை செயல்படுத்துகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 76.44 ஏக்கரில் கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீச்சல், படகு சவாரி, ஸ்கேட்போர்டிங் மற்றும் பிஎம்எக்ஸ் சைக்கிள் சாகச விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கான இடங்கள் அமைக்கப்பட உள்ளது. உள் விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்கும் விடுதிகள், மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் புல்வெளிகள் போன்ற வசதிகளும் இருக்கும். 13 மீட்டர் அகலத்தில், 1 கிலோமீட்டர் நீளத்தில் படகு சவாரி செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலேயே இதுபோன்ற விளையாட்டுகள் கொண்ட இடம் அமைப்பது இது முதன்முறை. விளையாட்டு வளாகத்தில் தண்ணீர் விளையாட்டு வசதியும் உள்ளது. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்கள் போன்ற கூடுதல் விளையாட்டு வசதிகள் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் வெள்ளத்தை தடுக்கும் முறையும் உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆறு, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு, 16.23 மில்லியன் கன அடியில் இருந்து 96.38 மில்லியன் கன அடியாக கொள்ளளவு அதிகரிக்கப்படும். குளங்களில் இருந்து எடுக்கப்படும் மண், நிலத்தை சமன் செய்ய பயன்படுத்தப்படும். இதனால் சுமார் 6 கோடி ரூபாய் மிச்சமாகும்.
மேலும், 42 ஏக்கரில் புதிய குளம் உருவாக்கப்படும். இதில் 20 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். இது மழைக்காலங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்தும். இதனால் நாவலூர், செம்மஞ்சேரி மற்றும் டிஎல்எப் கார்டன் சிட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்படும். வெள்ள மேலாண்மை திட்டத்தில் 4.1 கி.மீ சுற்றளவில் மண் வடிகால்கள் மற்றும் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படும். இது அதிகப்படியான நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பும். நீர்வளத்துறையின் மூலம் நீல-பச்சை தாழ்வாரமாக இதை உருவாக்க சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இந்த திட்டத்தை மேற்பார்வை செய்கிறது. மேலும், விளையாட்டு நகரத்திற்கு செல்ல சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உடன் இணைந்து மெட்ரோ இணைப்பு ஏற்படுத்தவும் திட்டம் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். நகர திட்டமிடல் நிபுணர்கள் இந்த திட்டத்தை கவனமாக செயல்படுத்த வேண்டும் என்கின்றனர். நல்ல முறையில் வடிவமைத்தால், குளங்கள் நகரத்தின் வடிகாலாக செயல்படும். வளாகத்தில் இருந்து வரும் அதிகப்படியான நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இதனால் வெள்ளம் குறைவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என அவர்கள் கூறினர்.