ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே வீசும் பலத்த காற்றுக்கு ஆற்றில் மிதந்து செல்லும் ரசாயன நுரைகள் சுழன்று மேலே எழும்பி வருகின்றன. இந்த ரசாயன நுரைகளால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கனமழை காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு 2200 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நேரத்தில் அணையில் இருந்து குவியல் குவியலாக சென்ற ரசாயன நுரைகள் அருகிலுள்ள தரைபாலத்தையே மூழ்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
ஆனால் ஆற்றில் செல்லும் ரசாயன நுரைகளின் அளவு மட்டும் குறையவில்லை. தொடர்ந்து ஆற்றில் ரசாயன நுரைகள் குவியல் குவியலாக சென்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ரசாயன நுரைகள் ஆற்றில் அதிக அளவு செல்கிறது. இன்று காலை நிலவரப்படி கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 801 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 40.67 அடிவரை நீர் சேமிக்கப்பட்டுள்ளது அணையின் பாதுகாப்பு கருதி, 801 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் செல்லும் ரசாயன நுரைகள் அப்பகுதியில் வீசும் பலத்த காற்றுக்கு சுழன்று சுழன்று நாலாபுறமும் செல்கிறது.
இந்த ரசாயன நுரைகளால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயன நுரைகள் கண்கள், உடல் மீது படும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.