திருமலை: திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி-திருமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ள நிலையில் தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி முதலாவது மலைபாதையில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் சிறுத்தை ஓடியதாக அவ்வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உள்ளது. தற்போது இந்த நேரத்தில் மாற்றம் செய்து தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்கள் செல்ல வேண்டும். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி மலைப்பாதையில் வரும் செப்டம்பர் மாதம் வரை 2 சாலைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
வனத்துறையின் துணை பாதுகாவலர் ஆலோசனையின்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வன விலங்குகளின் இனப்பெருக்க காலம் அதிகமாக இருக்கும். இதனால், முதல் மலைப்பாதை ரோட்டில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடக்கின்றன. பக்தர்கள் மற்றும் வன விலங்குகளின் நலன்களுக்காக 30.9.2024 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் முதல் மற்றும் இரண்டாவது மலைப்பாதை சாலைகளில் அனுமதிக்கப்படும். பக்தர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.