ஆவடி: கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டான். ஆவடி அடுத்த கொள்ளும்மேடு பகுதியை சேர்ந்தவர் சுதா(40). வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கேன்டீனில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கொரட்டூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயம் செய்து திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீர்த்திகா(7) என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து கோபித்துக் கொண்டு சுதா அதே பகுதியில் உள்ள, அவரது அம்மா உமாவதி வீட்டில் 3 வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில், அன்னனூர், ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சௌந்தரபாண்டியன்(35) என்பவருடன், சுதாவுக்கு கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டது. அதுவே, கள்ளகாதலாக மாறியது. இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில், தனது மகன் மற்றும் சௌந்தரபாண்டியுடன் சுதா ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆட்டோவில் இருந்து சுதாவை வெளியே தள்ளிய சௌந்தரபாண்டியன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சுதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் சௌந்தர பாண்டியன், ஆட்டோவில் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். சுதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர், பலத்த காயமடைந்த சுதாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில், கூட வந்த சுதாவின் மகனுக்கு தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த சம்பவத்திற்கு காரணமான சௌந்தரபாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளுமேடு பகுதியில் உள்ள புற்றுக்கோயில் அருகே மறைந்திருந்த செந்தூரபாண்டியை நேற்று கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.