சாத்தூர்: சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில், 1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் தமிழகத்தின் ‘மெகா’ ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு மார்ச் மாதத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையழுத்திடப்பட்டன. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்திற்கு 51 சதவீதம் ஒன்றிய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகின்றன. இங்கு ஊழியர்களுக்கான குடியிருப்புகளும், ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகமும் அமைய உள்ளது.
இதற்காக நாகர்கோவில் மதுரை நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் சாலையானது, 30 மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட்டு, 1.8 கி.மீ. வரை வடிகாலுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிப்காட் ஜவுளி பூங்காவுக்கு செல்லும் சாலையில் இருந்த 2 குழாய் பாலங்கள், 2 ஒரு கண் கொண்ட வெட்டுகல் பாலங்களை பெட்டி பாலங்களாக அகலபடுத்தப்பட்டு அப்பகுதியிலிருந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை மூலமாக வைப்பு நிதி பணியாக ரூ.26.50 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணியினை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி ஆய்வு செய்தார். ஆய்வின் போது விருதுநகர் மாவட்ட கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, விருதுநகர் உதவி கோட்டப்பொறியாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.