வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விசேஷங்களுக்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, சதுரகிரி கோயிலில் தினசரி சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாசி பெளர்ணமி என்பதால் விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். பவுர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், நிர்வாகி அதிகாரி செய்திருந்தனர்.