வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு உருவாக்கி சாட்ஜிபிடி தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில், சாட்ஜிபிடியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் துணை நிறுவனர் கிரேக் புரோக்மேன் இருவரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆல்ட்மேனின் திறனில் இயக்குநர்கள் குழு நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் தகவல் பரிமாறுவதில் நேர்மையாக இல்லை என்பதாலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக ஓபன் ஏஐ கூறியது.
இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன், கிரேக் புரோக்மேனை இருவரும் மைக்ரோசாப்ட்டின் புதிய ஏஐ ஆராய்ச்சி குழுவின் தலைவர்களாக இருப்பார்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாடெல்லா நேற்று டிவிட்டர் பதிவில் கூறி உள்ளார். இதற்கு ஆல்ட்மேன், ‘பணி இன்னும் தொடர்கிறது’ என பதிவிட்டு மைக்ரோட்டில் இணைந்ததை உறுதிபடுத்தி உள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளர் மைக்ரோசாப்ட். கடந்த 2018ல் ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் கைவிட்ட பிறகு மைக்ரோசாப்ட் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. தற்போது திடீரென ஓபன் ஏஐ நிறுவனர்கள் மைக்ரோசாப்ட்டில் இணைந்திருப்பது பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.