*வனத்துறையினர் தீவிர விசாரணை
தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிய மர்ம நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று அதிகாலை தென்பெண்ணையாறு காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி மூட்டைகளாக கட்டி எடுத்து வந்ததது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது அவர்கள் வேட்டையாடிக் கொண்டு வனவிலங்குகள், பைக் மற்றும் மூட்டைகளை அங்கேயே வீசிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடி தப்பி சென்றனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது அதில் மூன்று குட்டி புள்ளி மான்கள் அறுக்கப்பட்டு 40 கிலோ இறைச்சி, இறந்த நிலையில் 2 புள்ளி மான்கள், காட்டுப்பன்றி ஒன்று ஆகியவை இருந்தது.
உடனடியாக அவற்றை கைப்பற்றிய வனத்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வலை வீசி வருகின்றனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாடிய நபர்கள் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.