Sunday, September 8, 2024
Home » பழைய ஜாதி வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது: கி.வீரமணி வலியுறுத்தல்

பழைய ஜாதி வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது: கி.வீரமணி வலியுறுத்தல்

by Lavanya
Published: Last Updated on

சென்னை: பழைய ஜாதி வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம், வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு (11.8.2024) அரைப்பக்கம் செய்தி விளம்பரம் வந்துள்ளது.

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா?

இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது! பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள், மாறிவிட்டார்கள், இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர் பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, பார்ப்பனர்களின் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது தந்தை பெரியார் சொன்னதும், திராவிடர் கழகம் சொல்லிக் கொண்டு இருப்பதும் எத்தகைய மலை போன்ற உண்மை என்பது விளங்காமல் போகாது!

பழைய சம்பிரதாயங்களைப் புதுப்பிக்கப் போகிறார்களாம்!

அதுவும் எந்தக் காரணத்துக்காக இந்த ஏற்பாடாம்? ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘அதாவது தங்களது உயர்ஜாதி பிராமணத்துவ சம்பிரதாயங்களை பழையபடி மீண்டும் கொண்டுவர நிர்மாணிக்கத்தான் இந்தத் திட்டமாம்.
இதன் பொருள் என்ன?

அவர்களின் அந்தப் பழைய சம்பிரதாயம் என்பது என்ன?

மீண்டும் மனுதர்மமா?

பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் – இந்த உலகத்தை பிரம்மாவானவர் பிராமணர்களுக்காகவே படைத்தார். நான்காம் வருணத்தவனான சூத்திரன், பிரம்மாவின் காலில் பிறந்தவன் – விபச்சாரி மகன் – கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அவனை வேலை வாங்கலாம் என்கிற மனுதர்மம்தானே அவர்கள் கூறும் அந்த சம்பிரதாயம்!
மீண்டும் அந்த சம்பிரதாயம் என்றால், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு காணும் இந்தக் காலகட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல தொடை

தட்டுகிறார்களா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட, அமைதித் தென்றல் வீசிய தமிழ்நாட்டில், வேதபுரத்தார் வீண் வம்பு விஷ விதையை விதைக்கிறார்களா?காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, வானொலி மூலம் தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடமில்லாத ஒரு சூழ்நிலையை மிகவும் பொறுப்புடன் பாதுகாத்த பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு. அதேநேரத்தில், மும்பையில் அக்ரஹாரத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதும் உண்டு.

கடலைத் தாண்டிச் செல்லமாட்டார்களா?

பழைய சம்பிரதாயம் என்றால், பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு, திறந்த பூணூல் மேனியோடு திரிவார்களா? பஞ்சகச்சம் கட்டுவார்களா? கடலைத் தாண்டக் கூடாது என்ற பழைய சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பார்களா? பழைய நாளில் பிராமணன்தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ‘‘பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு’’ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது!’’ என்கிறாரே காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘‘காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள்‘‘ முதற்பகுதி ‘கலைமகள்‘ 1957–1958 பக்கம் 28). பிச்சை எடுக்கும் அந்தப் பழைய சம்பிரதாயத்தை மீண்டும் கடைப்பிடிக்கப் போகிறார்களா அக்கிரகார ‘திருமேனிகள்!‘

தெருக்களின் ஜாதிப் பெயரை நீக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி 1978 இல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக விருந்தபோது, சாலைகள் மற்றும் தெருக்களுக்கு இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். ஜாதி ஒழிப்புக்குக் கலைஞரின் பங்குதென் மாவட்டங்களில் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தையடுத்து மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களையும் நீக்கி ஆணை பிறப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர். அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள ஜாதிகளைக் குறிப்பிடும்போது, ஜாதிப் பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ‘ஆதிதிராவிடர் வகுப்பினர்’ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை 24.2.2007 இல் அரசாணை பிறப்பித்ததுண்டே!

சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு பள்ளிப் பாடப் புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களின் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு (5.8.2021 இல்) புதிதாக அச்சிடப்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தமிழ்நாடு அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், ‘பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்‘ என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை (உ.வே.சாமிநாதய்யர் என்பதை) தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. ரூ.500 கோடி செலவில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின்கீழ் (2021 ஜூன்) சென்னையில் இருக்கும் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்கியவர் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.கஸ்டாலின் .

சென்னையைப் பொறுத்தவரை 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன. இதில் ஜாதி ரீதியாகக் கிட்டத்தட்ட 50–க்கும் மேற்பட்ட ஜாதிப் பெயர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அடையாறில் அப்பாவு கிராமணி என்ற பெயரில் ஜாதிப் பெயரான கிராமணி நீக்கப்பட்டு உள்ளது. மாற்றாக அப்பாவு (கி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகைகளில் தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீடு ஆகியவை இடம்பெறுகின்றன. மொத்தமாக பெயர் பலகைகளை மாற்ற சென்னையில் 8.43 கோடி ரூபாய் இன்றைய தி.மு.க. ஆட்சியில் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது – தடுத்தாகவேண்டும்!

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காலகட்டத்தில் பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ திட்டமிடப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது தடுக்கவேண்டும்! அமைதிப்பூங்காவை அமளிகாடாக்கும் நிலைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் ‘திராவிட மாடல்’ அரசு! பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்த சென்னை இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (5.1.1953) பேசிய தந்தை பெரியார் , ஜாதி மனப்பான்மையைத் தூக்கி எறிந்து, மனிதர்களாக வாழ்வோம் என்று பார்ப்பனர்களுக்குக் கூறிய அறிவுரையை நினைவுப்படுத்துகிறோம்.

மீண்டும் பழைய சம்பிரதாய ஜாதித்துவ வீராப்பைக் காட்டலாம் என்று நினைத்தால், அதன் பலன் யாரைச் சேரும் என்பது மட்டும் நினைவிருக்கட்டும்! தமிழ்நாடு அரசு இதனை அலட்சியமாகக் கருதாது என்றும் எதிர்பார்க்கிறோம். பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கி, ‘‘நாடே சமத்துவபுரமாக ஒளிரவேண்டும்‘‘ என்று முழங்கியவர் முதலமைச்சர் கலைஞர். பெரியார் நினைவு சமத்துவபுரத்தைப் பெரும்பாலும் திறந்து வைத்தவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரும், இன்றைய முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் என்பது வரலாறு. அதற்கு நேர் எதிரான ஜாதித்துவத்தை, வருண தருமத்தை நிலைநாட்ட ஆழம் பார்க்கிறார்கள், எச்சரிக்கை! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

five + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi