புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி வெளியில் வந்தார். இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி யூடியூபர் சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ‘யூடியூபர் சங்கரை பொறுத்தவரை தொடர்ச்சியாக நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் தரக்குறைவாக பேசியே வருகிறார்.
கடந்த முறை நீதிமன்ற அவமதிப்பு விசாரணையின்போது எந்த வீடியோவும் பதிவிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மீறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தவித நிவாரணமும் வழங்க கூடாது’ என்று தெரிவித்தனர். அப்போது சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘தான் பேசியதற்கு சங்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டார். இருந்தும் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவர் மீதான அனைத்து எப்.ஐ.ஆர்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அவதுறாக பேசிவிட்டு சங்கர் எத்தனை முறை மன்னிப்பு கேட்பார். அதனை ஏற்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் யூடியூபர் சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிகாரிகரிக்கிறது. சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும்.
திருச்சியில் பதிவு செய்த வழக்கை மட்டும் தனியாக விசாரிக்கலாம். மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வழக்குகளையும் விரிவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. மேலும் சங்கர் மீதான வழக்கு தொடர்பான ஆதாரங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கையாளவும் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழக்குகள் பற்றிய கருத்துக்களை சங்கர் வெளியில் கண்டிப்பாக தெரிவிக்கக்கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற யூடியூபர் சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்கிறது’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டனர். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் யூடியூபர் சங்கர் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.