சென்னை: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2023ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆ.ராசா தரப்பில், தமது வருமான வரி கணக்கு தாக்கல் விவரம் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.வெங்கடவரதன், ஆர்.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் ஜூலை 23ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல், நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.