திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் வசிப்பவர் ஜான் என்கிற சபர் ஜான்(32). இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பேட்டரி மொபட் வாங்கியுள்ளார். நேற்று காலை வீட்டின் வராண்டாவில் நிறுத்தி மொபட் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் வீட்டிற்குள் திடீரென கரும்புகை வந்துள்ளது. வெளியே வந்து பார்த்தபோது, சார்ஜ் போட்டிருந்த பேட்டரி மொபட் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குடும்பத்தினரை வெளியேற்றினார். தகவலறிந்து திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். விசாரணையில், மொபட் பேட்டரிக்கு சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதனால் வீட்டில் இருந்த மற்றொரு இரு சக்கர வாகனம், பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்டவையும் எரிந்து நாசமாகின.