சென்னை: திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான மாரிமுத்து உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூரி, பிரசன்னா உள்ளிட்டோர் நடிகர் மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் மாரிமுத்து உடலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் கவிஞர் வைரமுத்துவின் மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் நடிகர் மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாரிமுத்துவின் மறைவுக்கு பல்வேறு நடிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
விஜயகாந்த் இரங்கல்:
நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு இரங்கல்:
நடிகர் மாரிமுத்துவின் மறைவுச் செய்தி வருத்தம் அளிக்கிறது என நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்துவும் நானும் ஒன்றாக பணிபுரிந்ததை நினைவுகூர்கிறேன். மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
நடிகர் விஷால் இரங்கல்:
வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதை மாரிமுத்துவின் மறைவு காட்டுகிறது என நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மாரிமுத்து இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறேன். மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி இரங்கல்:
நடிகர் மாரிமுத்துவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார். கதாபாத்திரங்களை யதார்த்தமாக முன்வைக்கும் அசத்தலான நடிகர் மாரிமுத்து எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.