உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் உள்ளன. கடந்த ஒரு வருடமாக இவர்கள் உடை மாற்றும் பெண்களை, ரகசிய வீடியோ எடுத்து வந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் இருவரும் பார்வையிடுவதற்காக பதிவு செய்யப்பட்டதா? அல்லது நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்பட்டதா? அல்லது இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டதா? இவர்கள் குழுக்களாக பிரிந்து இவ்வாறு செயல்படுகின்றனரா என பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் கோயில் போலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான 2 பேருக்கும் மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்களிடம் செல்போன்களைளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.


