புதுடெல்லி: தேர்தல் பத்திரத்துக்கு எதிரான வழக்கில் 7 ஆண்டுக்கு பின் முறையான விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வரும் 30 ம் தேதி முதல் விசாரணையை முறைப்படி நடத்த உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவதற்கான சட்டம் கடந்த 2017ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமானது, மாநிலங்களவையின் ஒப்புதல் பெறாமலேயே அமலுக்கு வந்தது.
இது சட்டவிரோதம் என்றும், அந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மூன்று பொதுநல அமைப்புகள் தரப்பில் கடந்த 2017ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக முறைப்படி விசாரணை நடக்கவில்லை. மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, தற்போது இந்த வழக்குகளை விசாரிக்கும் அளவுக்கு அவசரம் இல்லை என்பதால் பின்னர் விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று ஒரு முறையீடு வைக்கப்பட்டது. அதில்,‘‘விரைவில் ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அதனால் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவதற்கான சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் இதொடர்பான வழக்கானது வரும் 30ம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.
*இது மார்க்கெட் கிடையாது வக்கீலின் செல்போனை பறிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரித்து கொண்டிருந்த போது மூத்த வழக்கறிஞர் ஒருவர்,விசாரணை அறைக்குள் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதனை பார்த்து கோபமடைந்த தலைமை நீதிபதி, உதவியாளரை அழைத்து அவரிடம் இருக்கும் செல்போனை பிடுங்குங்கள். இது என்ன காய்கறி கடையா அல்லது மார்க்கெட்டா?.
உங்களது விருப்பத்திற்கு விசாரணை அறைக்குள் செல்போனில் ஹாயாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நீதிபதிகளாகிய நாங்கள் வெறும் கோப்புகளை மட்டும் பார்ப்பதில்லை. விசாரணை அறைக்குள் என்னென்ன நடக்கிறது என்பதையும் கவனித்து கொண்டு தான் இருப்போம் என தெரிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட வழங்கறிஞர் மன்னிப்பு கோரினார். இனிமேல் இதுபோன்று யார் நடந்து கொண்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோபமாக தலைமை நீதிபதி கூறினார்.