ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரின் அடிப்பகுதியில் உள்ள கிடைமட்ட கேமரா மூலம் எடுத்த நிலவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் நிலவில் காணப்படும் பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரில் உள்ள கிடைமட்ட கேமராவை இஸ்ராவின் எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம் உருவாக்கி உள்ளது. லேண்டரின் முன்பகுதியிலுள்ள மற்றொரு கேமரா மூலம் பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலம் சிறப்பாகச் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.