சென்னை: சந்திரயான் 3ல் இருந்து பிரிந்து சென்ற ரோவர் தனக்கிட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என்று இஸ்ரோ டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டு அதில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் பயணத்தை தொடங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கலனில் உள்ள பிரத்யேக கருவிகள் அதற்கான செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 14 நாட்கள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் தகவல்களை சேகரித்து, அதனை மேலும் ஆராய்ந்து நிலவில் உள்ள கனிமங்கள், அதன் தன்மை, நேரத்திற்கு ஏற்ப அதில் ஏற்படும் மாறுபாடுகள், நிலவில் வெப்பநிலை, பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் வெப்பநிலை என பல பிரத்யேக ஆய்வுகளை சந்திரயான் 3 திட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரோவர் தனக்கு இட்ட பணிகளை முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரோவர் தனக்கிட்ட பணிகளை முடித்துள்ளது. தற்போது பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. APXS- LIBS கருவிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ரோவரில் உள்ள கருவிகள் அனுப்பிய தகவல்கள் லேண்டர் வழியாக பூமிக்கு வந்தடைந்தது. தற்போது ரோவரின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. ரோவரில் உள்ள சோலர் பேனல் அடுத்ததாக நிலவில் சூரிய உதயம் வரும் 22ம் தேதி சூரிய ஒளியை பெறும் வகையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும் தகவல்களை பெறும் ரிசீவர் ஆன் செய்தே வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணிகளுக்காக ரோவர் செயல்படும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லையெனில் நிலவுக்கான இந்திய தூதராக என்றென்றும் ரோவர் அங்கேயே இருக்கும். இவ்வாறு இஸ்ரோ டிவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளது.