*கனிமொழி எம்பி பேச்சு
செய்துங்கநல்லூர் : சந்திரயான் திட்ட வெற்றியில் தமிழர்களின் பங்களிப்புபோல் வேளாண் துறையிலும் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உயர்ந்து சாதிக்க வேண்டுமென கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசினார். கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி – விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சண்முகையா எம்எல்ஏ, சப்-கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கண்காட்சியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்து பனைப் பொருட்கள், வாழை மற்றும் காய்கறி ரகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கனிமொழி எம்பி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், தனது சுதந்திர தின உரையில், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரிக்கு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்டி இந்த பகுதி மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனை, வாழை ஆராய்ச்சிக்கென தனியாக ஆராய்ச்சி மையத்தை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் அமைத்து தந்துள்ளார். விவசாயிகளின் அடுத்த கோரிக்கை, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்பதுதான். அக்கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
கண்காட்சியில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் வகைகள் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய நெல் வகைகளில் ஆராய்ச்சி செய்து அதை இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் வகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறைந்த காலத்தில் குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய பாரம்பரிய நெல் வகைகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் விரைவில் வெற்றி பெறுவோம். தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் முக்கியமான, இன்றியமையாத ஒன்று.
நீரிழிவு வந்தவுடன் அரிசி உணவை நிறுத்திவிட்டு, சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று கூறும் நிலை இருந்தது.ஆனால் இப்போது நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் தான் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சோளம், வரகு, கம்பு, ராகி உள்ளிட்ட உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய சிறுதானியங்களை விளைவிக்க அதிக தண்ணீர் மற்றும் அதிக நாட்கள் தேவைப்படாது.
உலகம் முழுவதும் தற்போது சிறுதானியங்களை அதிகம் வாங்குகிறார்கள். பழமையான விஷயங்களின் சிறப்பை உணர்ந்து அதை இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப மாற்றுவதுதான் ஆராய்ச்சி மையத்தின் முதல் கடமையாகும். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் மாணவர்களுக்கு புதுமையான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றபோது அந்த திட்டத்தின் இயக்குநர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல் இங்கு இருக்கும் மாணவர்களும் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக உயர்ந்து சாதிக்க வேண்டும், என்றார்.
முன்னதாக இணை இல்லா பனை என்ற புத்தகத்ைத கனிமொழி எம்பி வெளியிட்டார். நிகழ்ச்சிகளில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி, பனை ஆராய்ச்சி மைய சிறப்பு அலுவலர் சுவர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, திமுக கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு) ராமசாமி, (கிழக்கு) சுரேஷ் காந்தி, வல்லநாடு பஞ். தலைவர் சந்திரா முருகன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழைகளுக்கு நிவாரணம்
பேய்குளம் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் தொடர்பாக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியோடு இணைந்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்
படும். வைகுண்டம் பகுதிகளில் தீ விபத்தில் சேதமடைந்த வாழைகள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி எம்பி குறிப்பிட்டார்.