ஜெருசலேம்: சந்திரயான்-3 வெற்றி இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை என்று இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு உலக நாடுகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘சந்திரயான்-3’ வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதில், ‘சந்திரயான்-3’ வெற்றி இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை.
அனைத்து இஸ்ரேலிய குடிமக்களின் சார்பாக எனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து, யூத புத்தாண்டை முன்னிட்டு நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் குடிமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த உரையாடலின்போது தொழில்நுட்ப துறையில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்பு கொண்டனர் என்ற தகவல்கள் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளன.