இஸ்லாமாபாத்: ‘சந்திரயான்-3 நிலவில் கால் பதித்தது மாபெரும் அறிவியல் சாதனை’ என பாகிஸ்தான் மனம் திறந்து மகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளது. சந்திரயான்-3 வெற்றி குறித்து பாகிஸ்தான் வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் தாரா பலுச் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இது ஒரு மகத்தான சாதனை. இந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்குரியவர்கள்” என்று கூறினார். பாகிஸ்தானின் டான் நாளிதழ் ‘இந்தியாவின் அறிவியல் தேடல்’ என்ற தலைப்பில் தலையங்கம் வௌியிட்டுள்ளது. அதில், “சந்திரயான்-3 வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.
பணக்கார நாடுகள் அதிக முதலீட்டில் சாதித்ததை, இந்தியா குறைந்த முதலீட்டில் சாதித்து காட்டியிருப்பது மேலும் பாராட்டுக்குரியது. இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வு இந்த கடினமான பணி வெற்றி அடைய காணரம். இந்திய விண்வௌி துறை வெற்றியில் இருந்து பாகிஸ்தான் நிறைய கற்று கொள்ள வேண்டும்” என்று பாராட்டி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற நாளிதழ் ‘இந்தியாவின் லூனார் லாரல்’ என்ற தலைப்பில் வௌியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் விண்வௌி திட்டங்கள் தோல்வி அடைந்த நிலையில், இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது” என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளது.