சென்னை: சந்திரயான்-3 விண்கலம் தற்போதைய நிலையில் தன் வழக்கமான சுற்றுப்பாதையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த 14ம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கைக்கோள் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். இதன் முதல் கட்டமாக 15ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 173 கி.மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீட்டர் தொலைவு கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வந்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்படுகிறது. நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். குறிப்பிட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும். தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.