புதுச்சேரி: புதுவையில் அமைச்சர் சந்திரபிரியங்காவை நீக்க முதல்வர் ரங்கசாமி பரிந்துரை கடிதம் வழங்கி 14 நாட்களுக்கு பிறகு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். உடனே இது தொடர்பான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய அமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகன் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவியது.
ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் உடனடியாக அமைச்சர் பதவியை நிரப்ப முதல்வர் ரங்கசாமிக்கு ஆர்வமில்லை என தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சந்திரபிரியங்கா வைத்திருந்த ஆதிதிராவிடர் நலன், போக்குவரத்து, புள்ளியியல் மற்றும் பொருளாதாரம், கலை பண்பாடு உள்ளிட்ட துறைகளை தற்சமயம் முதல்வரே கவனித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் போது, சில அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றி அமைக்கவும், கூடுதலாக துறைகளை ஒதுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திருமுருகன் எம்எல்ஏ, முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காரைக்காலின் தற்போதைய நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது. பெயர்பலகை அகற்றம்: அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ததால் புதுச்சேரி சட்டசபையில் உள்ள சந்திரபிரியங்கா அலுவலகத்தை ஊழியர்கள் காலி செய்தனர். அவர் பெயர் பொறித்த பலகையையும் சட்டசபை காவலர்கள் அகற்றினர்.