புதுடெல்லி: சந்திரபாபு நாயுடு மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான மூந்த வழக்கறிஞர், ‘‘திறன்மேம்பாடு திட்டம் தொடர்பான விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மீது ஆதாரம் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுமார் 115 முறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டும் அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பப்படவில்லை எனவே சந்திரபாபு நாயுடு மீதான வழக்கின் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரித்தார்.
அதற்கு ஆந்திர மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முருல் ரோத்தகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் அனைத்து ஆவணங்கள் கொண்ட தொகுப்பையும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது ‘என உத்தரவிட்டனர்.