கிருஷ்ணகிரி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகம்-ஆந்திரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில எல்லையான காளிக்கோயில் பகுதியில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில்ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில், நேற்று காலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்பி தனஞ்செயநாயுடு அளித்த நோட்டீஸில், ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரா மாநிலங்களில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள், ஆந்திரா மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம்(சந்திரபாபு நாயுடு தொகுதி) செல்லும் பஸ்கள் அனைத்தும், தமிழக எல்லையான காளிக்கோயில் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.