புதுச்சேரி: சந்திர பிரியங்கா அமைச்சர் பதவி பறித்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமியை பாஜ சிக்க வைக்க காய் நகர்த்து வருகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற சந்திர பிரியங்கா விவகாரத்தை வைத்து பாஜ அரசியல் செய்ய துவங்கி உள்ளது. புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சரியாக செயல்படவில்லை என கூறி அவரை டிஸ்மிஸ் செய்து காரைக்கால் எம்எல்ஏ திருமுருகனை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி கடிதம் வழங்கினார்.
ஆனால், சந்திரா பிரியங்கா அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையில் எழுந்த புகாரால்தான் முதல்வர் ரங்கசாமி அவரது பதவியை பறித்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் பரிந்துரை கடிதத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதை கவர்னர் மாளிகையின் நெருக்கத்தின் மூலம் அறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் தொகுதி மக்களுக்கு எழுதிய கடித்ததில், ‘தான் சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் பெரும் தாக்குதலுக்கு உள்ளேன். ஆணாதிக்க கும்பலின் அரசியல் சூழ்ச்சிகளால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், சந்திர பிரியங்கா குற்றச்சாட்டை விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார். ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் தலைவர்கள், சபாநாயகர், ஆளுநர் உள்ளிட்டோர் சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், சந்திர பிரியங்கா தரப்போ ராஜினாமா செய்ததாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதுவரை நீக்கப்பட்டாரா, ராஜினாமா ஏற்கப்பட்டதா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் சர்ச்சை நீடிக்கிறது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ரங்கசாமியோ மவுனமாக இருந்து வருகிறார். இதுகுறித்து சந்திர பிரியங்காவிடம் விளக்கம்பெற பலமுறை செல்போனில் முயன்றும் முடியவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜ கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பாஜ நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மாறாக அமைச்சர் பதவி நீக்கம் விவகாரம் உள்கட்சி பிரச்னை, அவர்களது கட்சி தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென கூறி நழுவி விட்டார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு, முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில் தாழ்த்ப்பட்ட ஓட்டுகள், பாதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரத்தில் பாஜ, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. இதனால் இவ்விவகாரத்தை ரங்கசாமி பக்கமே பாஜ திருப்பி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் மாளிகை வெளியிட்டால் பாஜவுக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், அரசுக்கு தெரியப்படுத்தி அரசாணை வெளியிட பாஜ திட்டமிட்டுள்ளது. பாஜவின் அரசியலை அறிந்த முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மவுனமாக இருக்கிறார். இதற்கிடையே பெண் அமைச்சர் புகாரின் அடிப்படையில் சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் அவருக்கு துன்புறுத்தல் கொடுத்தவர்கள் யார்? என்பதை கண்டறிய தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
*பெண் அமைச்சர் நீக்கத்தில் பல உண்மைகள் வெளியே வரும் – தமிழிசை திடுக் தகவல்
தெலங்கானாவில் இருந்து புதுவை திரும்பிய துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று மாலை கவர்னர் மாளிகையில் அளித்த பேட்டி: அமைச்சர் சந்திர பிரியங்காவை தந்தை போல் முதல்வரும், சகோதரர்கள் போல் அமைச்சர்களும் பார்த்து கொண்டிருந்தார்கள். முதல்வர் எந்த வகையிலும் அவருக்கு குறை வைக்கவில்லை. இதை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. சந்திரபிரியங்கா சொல்கின்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்ைட அவர் கூறியிருக்கக் கூடாது. ஒரு பெண் எல்லா விதத்திலும் முன்னுக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை. என் வகையில் எந்த தவறும் இல்லை.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி எப்போதுமே துணைநிலை ஆளுநருடன் சண்டை போடும் வேலையிலேயே இருப்பார். நான் அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ மீறவில்லை. ஒரு கட்சியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இது அக்கட்சியின் தலைவருக்கும், அமைச்சருக்கும் உள்ள பிரச்னை. பொதுவெளியில் பார்த்ததை வைத்து சந்திர பிரியங்கா நன்றாக செயல்படுவதாக நான் கருத்து கூறினேன். இதில் என்னை டார்கெட் செய்ய ஒன்றுமில்லை. சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாக இருந்தேன். அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பல உண்மைகள் வெளி வரும்போது உங்களுக்கு தெரியும் என்றார்.