ஹைதாபாத் : திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அம்மாநில நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ம் தேதி கைதுசெய்யப்பட்டார். போலீசார் அவரை விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது. இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், உடல்நிலை மற்றும் பார்வை கோளாறு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதால் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஜாமீன் மீது இன்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடாது என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.