சென்னை: வடதமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். எனினும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு நேற்று 13 மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பூண்டியில் 90மிமீ மழை பெய்தது.
வேலூர் 70மிமீ, ஆர்.கே.பேட்டை, காவேரிப்பாக்கம் 60மிமீ, சோழவரம், பனப்பாக்கம், பள்ளிப்பட்டு, அம்மூர், திருத்தணி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், வளசரவாக்கம், மணலி 50மிமீ, காட்டுக்குப்பம், தாமரைப்பாக்கம், பெரம்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சென்னை டிஜிபி அலுவலகம் 40மிமீ மழை பெய்தது. மழை பெய்தா நிலையிலும் கூட, பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், திருச்சி 104 டிகிரி, கரூர், மதுரை 102 டிகிரி, நாகப்பட்டிணம் 99 டிகிரி, சென்னை 91 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், தர்மபுரி, கரூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக வெப்பம் இருந்தது.
கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் உணரப்பட்டது. ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் இருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.