சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் நேற்று மழை பெய்தது. சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கன மழை பெய்தது. சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 40 மிமீ மழை பெய்தது. வந்தவாசி 30 மிமீ, தலைவாசல், பவானி, சென்னை திருவிக நகர், செங்கல்பட்டு 20 மிமீ, நாமக்கல், திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி, விருதுநகர், மணலி, மாமல்லபுரம் 10 மிமீ மழை பெய்தது.
இதற்கிடையே, கரூர் மற்றும் திருநெல்வேலியில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை இருந்தது. மேலும் தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், கோவை, கடலூர், மதுரை, திருப்பத்தூர், திருச்சி, நீலகிரி, மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்ப நிலை காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல கீழக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.