சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், கேரளாவின் கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து 17ம் தேதி 18 மாவட்டங்களிலும், 18ம் தேதி 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 21ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.