குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் குமி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் அபார திறனை வெளிப்படுத்தி முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். போட்டி துாரத்தை அவர், 28 நிமிடம் 38.63 நொடிகளில் கடந்து இந்த சாதனையை படைத்தார். குல்வீர் சிங் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி நடக்கும் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் குல்வீர் சிங் கலந்து கொள்கிறார். அப்போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் நடந்த ஒரு போட்டியில், இந்த துாரத்தை 12.59.77 நிமிடங்களில் கடந்து குல்வீர் சிங் தேசிய சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, நேற்று காலை நடந்த 20 கி.மீ. நடை பந்தய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் வென்றார். பந்தய துாரத்தை அவர் ஒரு மணி நேரம் 21 நிமிடம், 13.60 நொடிகளில் கடந்தார். இப்போட்டியில் சீன வீரர் வாங் ஷாவோஷாவோ தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் கென்டோ யோஷிகாவா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.