போடெப்ராடி: செக் நாட்டில் நடந்த யூரோப்பியன் நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலி வீரர் மாஸிமோ ஸ்டானோ புதிய உலக சாதனை படைத்துள்ளார். செக் குடியரசு நாட்டின் போடெப்ராடி நகரில் நேற்று, யூரோப்பியன் நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. 35 கி.மீ. நடை போட்டியில் இத்தாலி வீரர் மாஸிமோ ஸ்டானோ (33) அசுர வேகத்தில் நடந்து சக போட்டியாளர்களை எளிதில் முந்தினார்.
கடைசியில், 2 மணி, 20 நிமிடம் 43 நொடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்ற அவர் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், கனடா வீரர் இவான் டன்ஃபீ, கடந்த மார்ச் மாதம், இந்த துாரத்தை 2 மணி 21 நிமிடம் 40 நொடிகளில் கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை, 57 நொடி வித்தியாசத்தில் மாஸிமோ முறியடித்துள்ளார்.
மாஸிமோ இதற்கு முன்பும், 35 கி.மீ நடை பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். தவிர, 2021ல் டோக்கியோவில் நடந்த 20 கி.மீ. நடை பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ், 35 கி.மீ. துார நடை போட்டியில் 2 மணி, 38 நிமிடம், 59 நொடிகளில் பந்தய துாரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.