Sunday, February 25, 2024
Home » பச்சோந்தி அரசியல்

பச்சோந்தி அரசியல்

by Dhanush Kumar

அ ரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பொருந்தும். முதல்வர் பதவிக்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் கூட்டணியை மாற்றிக் கொள்வது வழக்கமாக உள்ளது. கடந்த 1974ம் ஆண்டு மாணவ பருவத்தில் அரசியலுக்கு வந்த நிதிஷ்குமார் இதுவரை மொத்தம் 5 கட்சிகளை மாற்றியுள்ளார். ஜனதாதளம், சமதா, ஐக்கிய ஜனதா தளம் என அவர் கட்சி மாறி காய்களை நகர்த்தி அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பீகாரின் மகா கூட்டணியிலும் மாறி, மாறி இருந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற அவர், பீகாரின் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஊழல் வழக்கில் சிக்கியபோது, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜ கூட்டணியில் கைக்கோர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். 2020ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பாஜ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, வெற்றி பெற்று முதல்வரானார். பின்னர் 2022ம் ஆண்டில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி மகா கூட்டணியில் இணைந்து முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். 18 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் மகா கூட்டணியை நடுத்தெருவில் விட்டுவிட்டு, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சங்கமித்துவிட்டார். கூட்டணி எதுவாக இருந்தாலும் தனக்கு முதல்வர் பதவி ஒன்றே குறிக்கோள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

நிதிஷ்குமாரின் இந்த பச்சோந்தி அரசியலுக்கு பீகார் வாக்காளர்களும் முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டுகளாக அவரது கூட்டணியை வெற்றி பெற வைப்பதோடு, தேர்தல் கால கணக்குகளை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். பீகாரில் லல்லு பிரசாத் யாதவிற்கு பின்னர் ஒரு வலுவான அரசியல் தலைவர் உருவாகாத காரணத்தால், நிதிஷ்குமார் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இரு பக்கமும் சாய்ந்து குளிர் காய்கிறார். அரசியல் சதுரங்கத்தில் அவர் நகர்த்துகிற காய்கள் எல்லாம் எதிரணியை வீழ்த்தி விடுவதும் வேடிக்கையாகவே உள்ளது. இந்தியா கூட்டணி உருவாவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திவிட்டு, மந்தையில் இருந்து வெளியேறுகிற கருப்பு ஆடு போல பாஜவின் கூடாரத்திற்குள் அவர் புகுந்துவிட்டார். இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சிமுறையை உருவாக்க துடிக்கும் பாஜவின் சித்து விளையாட்டுகளும் இதில் அதிகம், பாஜ ஆளாத மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, எதை வேண்டுமானாலும் சாதிக்க துடிக்கும் பாஜவிற்கு இப்போது பகடைக்காயாக பீகாரில் நிதிஷ்குமார் கிடைத்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவை உடைத்து தில்லுமுல்லு வேலைகளை அரங்கேற்றியது. மத்திய பிரதேசத்திலும் குதிரை பேர அரசியலை முன்பு அரங்கேற்றியது. கோவா, மணிப்பூர், கர்நாடகா என பாஜ, அதிகாரத்தை பிடிக்க நடத்திய நாடகங்கள் அதிகம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், தனக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுபெற்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்ேபாதே பாஜ இழிவான அரசியலை நடத்த தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதால் மட்டுமே பாஜவின் ஜம்பம் இன்னமும் பலிக்கவில்லை. தாங்கள் சார்ந்துள்ள கொள்கைகள் அடிப்படையில் அவை எப்போதும் உறுதித்தன்மையோடு நிற்பதால், பாஜவின் முகத்தில் அடிக்கடி கரி பூசப்பட்டு வருகிறது. கட்சியும், கொள்கைகளும், தொண்டர்களும் நம்மோடு இருந்தால் பதவிகள் நம்மை தேடி வரும் என்பதை நிதிஷ்குமார் போன்றவர்கள் உணரும் காலம் விரைவில் வரும்.

You may also like

Leave a Comment

ten − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi