மதுராந்தகம்: சாலவாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் கோடை மழை நம்பியும், கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணற்று உள்ளிட்ட நீர் ஆதார மூலமாக பாசனம் செய்தும் ஏராளமான விவசாயிகள் கோடையில் இரண்டாவது போகம் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது, அதன் அறுவடை சீசன் களைக்கட்டியுள்ளது. மேலும், இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை செய்யப்படும் நெல்லை அரசே உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். மனுவின் மீது அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் அனைவரும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதனைத்தொடர்ந்து, எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வெங்கடேசன், சேகர், சிவராமன், நந்தா, தங்கராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.