உத்திரமேரூர்: சாலவாக்கம் பகுதிகளில் சுகாதாரத்துறையினரால், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் சாலவாக்கம் கிராமங்களில் வட்டார சுகாதாரத்துறை சார்பில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், உத்திரமேரூர் பேரூராட்சி 17வது வார்டு நல்லூர் பகுதியில் வீதி வீதியாக சென்று தேவையற்ற இடங்களில் உள்ள டயர்கள், தேங்காய் சிறட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர், பேரூராட்சி துப்புறவு பணியாளர்களுடன் இணைத்து அப்புறப்படுத்தி சீரமைத்தனர்.
இதேபோல், சாலவாக்கம் கிராமம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பொது இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி, சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தேவையற்ற இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றினர். இந்நிகழ்வில், உத்திரமேரூர் பேரூராட்சி செயலாளர் பழனிகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியாசக்திவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.