ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். நாகை மீனவர்களை கடற்கொள்ளையர் தாக்கி ரூ.4 லட்சம் பொருட்களை பறித்து சென்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
அச்சமடைந்த மீனவர்கள், வலைகளை வெட்டி கடலில் வீசி விட்டு தப்பினர். அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மரியசியா என்பவரின் படகை இலங்கை கடற்படை சுற்றிவளைத்து சிறை பிடித்தனர்.
அதிலிருந்த கிங்சன்(40), மெக்கான்ஸ்(37), ராஜ்(43), இன்னாசி ராஜா(45), சசி(40), மாரியப்பன் (40), அடிமை(33), முனியராஜ்(23) ஆகிய 8 மீனவர்களை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர். மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவில் மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை இந்தாண்டில் மட்டும் 341 தமிழக மீனவர்களை கைது செய்தும், 46 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
கொள்ளையர் அட்டகாசம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை(55) தனது பைபர் படகில் மகன் மணிகண்டபிரபு (22), கங்காதரன்(38) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர், பைபர் படகை சுற்றி வளைத்ததோடு பட்டாகத்தி, இரும்பு கம்பியால் 3 மீனவர்களை தாக்கி, இன்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். தாக்குதலில் மணிகண்டபிரபுவின் இடது பக்க தொடையில் காயம் ஏற்பட்டது. அவர் நேற்று காலை செருதூர் மீன்பிடி இறங்குதளம் வந்ததும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
பாஜ ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கை:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும் மிக எளிதாக விடுவிக்கப்பட்டனர். பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கை கடற்படையின், தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. மீனவர்களை விட்டாலும், படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அரசு, மைனாரிட்டி அரசாக பலவீனமாக இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற டல்வின்ராஜிக்கு சொந்தமான விசைப்படகு கடலில் திடீரென மூழ்கியது. இதில் படகில் இருந்த மீனவர்கள் டல்வின்ராஜ்(45), எமரிட்(49), முனியாண்டி (55), சுரேஷ்(49) ஆகிய 4 பேரும் கடலில் தத்தளித்தனர். இதில் மீனவர்கள் டல்வின்ராஜ், சுரேஷ் இருவரும் நீந்தியபடி கச்சத்தீவு கடல் பகுதிக்கு சென்றபோது, இலங்கை கடற்படையினர் மீட்டு கச்சத்தீவு கடற்கரைக்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் எமரிட், முனியாண்டி இருவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.