Friday, July 18, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் பெண்களை அதிகம் தாக்கும் கருப்பை வாய் புற்று நோய்!

பெண்களை அதிகம் தாக்கும் கருப்பை வாய் புற்று நோய்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது கருப்பை வாய் புற்றுநோய்(Cervical Cancer). Uterus எனப்படும் கர்ப்பப்பை Vagina எனப்படும் பிறப்புறுப்பு இந்த இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிதான் Cervix. அதாவது, கர்ப்பப்பை வாய் அல்லது கருப்பை வாய் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உருவாகும் புற்று நோயைதான் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அல்லது Cervical Cancer என்கிறோம்.இது மெதுவாக வளரும் கேன்சர் என்பதால் உடலில் இருப்பது பல வருடங்களாக வெளியில் நமக்குத் தெரியாது.

எதனால் ஏற்படுகிறது…

கருப்பை வாய் புற்றுநோய் உருவாக முக்கியமான காரணம் Human Papilloma Virus (HPV) எனப்படுகிற மனிதர்களிடம் மட்டுமே காணப்படும் ஒருவகையான வைரஸ். இதில் சுமார் 170க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், எல்லா வகையான HP வைரஸ்களும் புற்றுநோயை உருவாக்காது. இதிலும் குறைந்த ஆபத்துள்ள Low risk group HP virus, அதிக ஆபத்துள்ள High risk group virus என இரண்டு விதமான குரூப் வைரஸ்கள் இருக்கிறது.

Low risk group HP வைரஸால் உடலில் எந்தவிதமான பிரச்னைகளும் தோன்றாது. உடலில் மருக்களை மட்டுமே தோற்றுவிக்கும். ஆனால் High risk group வைரஸில் உள்ள 14 வகையான வைரஸ்களில் டைப் 16, டைப் 18, டைப் 31, டைப் 45 இந்த நான்கு வகையான வைரஸ்கள் மட்டுமே புற்றுநோயினை உருவாக்கக்கூடியவை.வைரஸ் நமது உடலுக்குள் வந்ததும், நோய் ஏற்பட்டதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் வெளியில் தெரியாது. மிகவும் நார்மலாகவே நாம் இருப்போம். 90 சதவிகிதம் மக்களின் நிலை இதுதான்.

இந்த வகை வைரஸ் நம் உடலில் நுழைந்தாலும், நமது நோய் எதிர்ப்பு திறனானது ரொம்பவே ஸ்ட்ராங்காக ஆரோக்கியமாக இருந்தால், போராடி அதனை அழித்துவிடும். ஆனால் 10%
மக்களுக்கு, அவர்களது நோய் எதிர்ப்புத் திறன் குறைவால் முழுமையாக அழிக்க முடியாமல், இந்த வகை வைரஸ்கள் அவர்களது உடலில் பல வருடங்களாக அப்படியே தங்கி, புற்று நோயை உண்டு பண்ணுகின்றன.

HP Virus கேன்சரை உருவாக்குதல்…

நமது உடலில் ஒவ்வொரு பகுதிகளில் இருக்கக்கூடிய செல்களுக்கும் ஒரு வாழ்நாள் உண்டு. குறிப்பிட்ட வாழ்நாளுக்கு பிறகு அந்த செல்கள் தானாகவே அழிந்து, அதே இடத்தில் புதிய செல்கள் உருவாகும். கருப்பை வாய் பகுதியிலும் இதுதான் நடைபெறுகிறது.நமது கருப்பை வாய் பகுதியில் இரண்டுவிதமான செல்கள் இருக்கிறது. உள்பக்கம் இருப்பது glandular என அழைக்கப்படும் பருமனான செல்கள். வெளிப்புறம் இருப்பது, நீளமாய் மெலிதாக இருக்கக்கூடிய Squamous epithelial எனப்படும் செல்கள்.

நம் உடலுக்குள் போகக்கூடிய HP வைரஸ் தனது DNAவை, கருப்பை வாய் பகுதியில் உள்ள செல்களில் இருக்கும் DNA மரபணுவோடு இணைத்துக் கொள்ளும். பிறகு அந்த செல்களில் சிலவித
மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, அழிந்து போக வேண்டிய இயல்பான செல்கள், அழியாமல் கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே போகும். இதைத்தான் Pre cancerous stage என அழைக்கிறோம்.

இதில் வெளிப்புறமாக உள்ள Squamous epithelial செல்களில் புற்றுநோய் ஏற்பட்டால், Squamous cell carcinomas என்கிறோம். உள்பக்கம் உள்ள Glandular செல்களில் புற்றுநோய் தோன்றினால் அதை adinocarcinomas என்கிறோம்.

யாருக்கெல்லாம் இது பரவுகிறது…

* இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்.
* அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.
* 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள்.
* ஏற்கனவே பால்வினை தொற்றுநோய் இருப்பவர்கள்.
* பலரோடு உடலுறவு கொள்பவர்கள். அல்லது அப்படிப்பட்ட நபருடன் உடலுறவில் ஈடுபடுபவர்கள்.
* நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள பெண்கள்.
* புகை பிடிப்பவர்கள்.
* சுற்றி யுள்ளவர்கள் புகை பிடித்தாலும்

இதுமாதிரியான மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் Human Papilloma virus பரவும்.எந்த வயது பெண்களைத் தாக்கும்…

20 வயதுக்கும் குறைவான பெண்களுக்கு அரிதாகவே இருக்கும். ரீ புரொடக்டிவ் ஏஜ் என சொல்லப்படும் 35 முதல் 45 வயது உள்ள பெண்களுக்கும், சராசரியாக 50 வயதுடைய பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் காணப்படும்.

இதன் முக்கியமான அறிகுறிகள்…

நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு HP வைரஸ் பல வருடங்களாக உடலில் அப்படியே தங்கி இருக்கும். இவை கேன்சர் செல்களாக மாறுவதற்கு 15 முதல் 20 வருடங்கள் எடுக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் வைரஸ் உடலில் இருப்பதும், அது கேன்சராக உருவாகுவதற்கான அறிகுறி எதுவும் தென்படாது. எனவேதான் இதனை ஸ்லோ கேன்சர் என்கின்றனர். கேன்சராக இது வளர்ந்து ஃப்ரீ கேன்சர் ஸ்டேஜ் அடையும் போதே அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

பசியின்மை, உடல் சோர்வு, உடல் எடை அதிகமாகக் குறைவது, இடுப்புக்கு பின் பகுதியில் வலி உருவாகுதல், அதிக அளவில் வெள்ளைப்படுதல், உடலுறவுக்கு பிறகு வலி ஏற்படுதல், கால்களில் வலி, வீக்கம் ஏற்படுவது, மாதவிடாய் இல்லாத நேரங்களிலும், மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தம் வெளியேறுதல்.

Pap Smear Test & HPV DNA Test…

HP வைரஸ் கேன்சராக உருவாக எடுக்கும் இடைவெளியில், கேன்சராக உருவாகப் போகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஸ்கிரீனிங் டெஸ்ட் இரண்டுவிதமாக இருக்கிறது.

ஒன்று Pap Smear Test. மற்றொன்று கோ டெஸ்ட் என அழைக்கப்படும் Human Papilloma Virus DNA Test. இதில் Pap Smear Test எல்லாவிதமான ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக செய்யப்படுகிறது. 21 வயதில் இருந்து 65 வயது உள்ள பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை Pap Smear Test மற்றும் 5 ஆண்டுக்கு ஒருமுறை Pap டெஸ்டுடன் கோ டெஸ்ட் எனப்படும் HPV DNA Testம் எடுக்க வேண்டும். டெஸ்டு வழியாக ஆரம்பத்திலே இதனை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். 21 வயதுக்கு கீழ் உள்ள டீன் ஏஜ் பெண்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த டெஸ்ட் தேவையில்லை.

கருப்பை வாய் புற்றுநோயில் ஸ்டேஜ் 0 என்பது ஆரம்ப நிலை. அதாவது, புற்று நோயாக மாறக்கூடிய ரிஸ்க் அதிகம் உள்ள ஃப்ரீ கேன்சர் ஸ்டேஜ். ஸ்டேஜ் 1 என்பது கருப்பை வாய் பகுதியில் மட்டுமே நோய் இருக்கிறது என அர்த்தம். ஸ்டேஜ் 2 என்பது கருப்பை வாய் பகுதியை தாண்டி பிறப்புறுப்புகளில் பரவி இருக்கிறது என பொருள். ஸ்டேஜ் 3 பிறப்புறுப்பைத் தாண்டி சிறுநீரகம் வரை பரவியிருப்பது. ஸ்டேஜ் 4 கேன்சர் செல்கள் உடலில் பரவி நுரையீரல் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது.

இதில் எந்த ஸ்டேஜ் என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை முறைகளை எடுக்க வேண்டும். இதில் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, ஹுமோ தெரபி, இம்யூனோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் இருக்கிறது.

Human Papilloma Virus Vaccine..

கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகளும் இருக்கிறது. இதை சுருக்கமாக HPV vaccine அதாவது, Human Papilloma Virus Vaccine என்பார்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும்.9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் என்றால் அவர்கள் பூப்பெய்வதற்கு முன்பாக இந்த தடுப்பூசியினை செலுத்தலாம்.

12 வயதுக்குள் போடாதவர்கள் 13 வயதில் இருந்து 26 வயதுக்குள் போட்டுக் கொள்ளலாம். திருமணம் ஆன பெண்கள் எனில், முதல் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும் 3 வருடத்திற்கு ஒருமுறை Pap Smear Test செய்து பார்க்க வேண்டும். காரணம், கேன்சரை உருவாக்கும் Human Papilloma வைரஸ்களில் 5 வகைகளுக்கு
எதிராக மட்டுமே இந்த தடுப்பூசி செயல்படுகிறது.

ஆண்களையும் தாக்கும்…

Human Papilloma virus பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களுக்கும், ஆண் உறுப்பை சுற்றி (Penile Cancer), மலம் வரக்கூடிய பாதைகளில் (Anal cancer) தொண்டைப் பகுதிகளில் (Oropharyngeal cancer) புற்றுநோயை உருவாக்கும்.

தொகுப்பு: மணிமகள்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi