சென்னை: சான்றிதழ் வழங்க ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார். ரூ.5 ஆயிரம் வாங்கிய தீயணைப்பு துணை அலுவலரும் சிக்கினார். விழுப்புரம் நகராட்சி எல்லை சாலமேடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் வீட்டு மனைகள் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் நிலத்தை பதிவு செய்ய தடை மனு கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி செயல் அலுவலரிடம் சென்று கேட்டபோது, ரூ.1.80 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சேட்டு புகார் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி நேற்று ரசாயனம் தடவிய ரூ.1.80 லட்சத்தை செயல் அலுவலர் முருகனிடம் நேற்று சேட்டு வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முருகனை கைது செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், துணை அலுவலராக நாகராஜன் (55) பணியாற்றி வருகிறார். இங்கு, சிவகங்கை அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த கற்பகமூர்த்தி கோழிப்பண்ணை தொடங்க தடையில்லா சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார்.
அந்த இடத்தை பார்வையிட்ட நாகராஜன், கற்பகமூர்த்தியிடம் ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். பணம் வாங்குவதை செல்போன் மூலம் கற்பகமூர்த்தி வீடியோ எடுத்துள்ளார். சான்றிதழ் வழங்க மேலும் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்கவே, தான் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்த போது எடுத்த வீடியோ ஆதாரத்துடன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை நேற்று துணை அலுவலர் நாகராஜனிடம் வழங்கினார். அப்போது சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நாகராஜனை கைது செய்தனர்.