பாரம்பரிய உணவுகள் என்றாலே அதற்கு தனி வரவேற்பு உள்ளது. அதை முறையாக நமக்கு சமைக்க தெரியவில்லை என்றாலும் அதற்கான தனிப்பட்ட உணவகங்கள் உள்ளன. அங்கு சென்று அந்த உணவினை விரும்பி சுவைக்க பலர் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே சிறு தானியம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை கொண்டு அதன் தன்மையில் இருந்து சிறிதும் மாறுபடாமல் எளிமையான முறையில் உடனடியாக சமைக்கும் படியான உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார் திருநெல்வேலியை சார்ந்த பிரதீபா. இவர் இந்த உணவுகளை பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு பிடித்த வகையில் நூடுல்ஸாகவும், பாஸ்தா வகைகளாகவும் தயாரித்து ‘மில்லெட் லீஃப்’ என்ற பெயரில் தன் கணவருடன் இணைந்து விற்பனை செய்து வருகிறார்.
‘‘எங்களின் பொருட்களுக்கு மில்லெட் லீஃப் என்று பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டு’’ என்று பேசத் துவங்கினார் பிரதீபா. ‘‘எங்களின் பொருட்கள் அனைத்தும் சிறுதானிய வகைகள் தான். மேலும் அந்த உணவுகள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் இதற்கு மில்லெட் லீஃப் என பெயர் வைத்தோம். நான் எம்.சி.ஏ பட்டதாரி. ஆரம்பத்தில் எனது கணவரின் வேலைக்காக பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது.
அப்படி நாங்கள் அங்கு செல்லும் சமயங்களில் நமது பாரம்பரிய உணவு வகைகள் எளிதில் கிடைக்காதது எங்களுக்கு பெறும் ஏமாற்றமாக இருந்தது. அதனால் எங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் சொல்லி எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வோம். அது போல எங்கள் நண்பர்களுக்கும் கொடுப்போம். பின் இதையே ஏன் ஒரு தொழிலாக துவங்கக்கூடாது என தோன்றியது. அதன் பேரில் 2020ல் ஆரம்பிச்சதுதான் எங்களின் மில்லெட் லீஃப்’’ என்றவர் தங்கள் நிறுவனம் மற்றும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தை பற்றி விளக்குகிறார்.
‘‘நாங்கள் மில்லெட் வகைகள் மட்டுமில்லாமல் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட சில மதிப்பு கூடுதல் பொருட்களையும் கொடுத்து வருகிறோம். அதாவது சாதாரண சிறுதானியங்களாக அதனை வழங்காமல், அதனை எளிய முறையில் இன்ஸ்டன்டாக சமைக்கக் கூடிய பொருட்களாக விற்பனை செய்கிறோம். உதாரணத்திற்கு தினை என்றால் அதில் தோசை மாவு மற்றும் எல்லா சிறுதானியங்கள் கொண்ட சத்து மாவு என விற்பனை செய்கிறோம். எங்க நிறுவனத்தில் பெண்கள்தான் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
சொல்லப்போனால் இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமில்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உழைப்பிற்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம். எங்களுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது வெளி நாடுகளுக்கும் எங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். மில்லெட் லீஃப்பிற்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் குறு விவசாயிகளிடமிருந்தும், சுய உதவி குழுக்களிடமிருந்தும் நேரடியாக கொள்முதல் செய்து வருகிறோம். பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறு தானிய வகைகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
மேலும் எந்த ஒரு ரசாயன பொருட்களும் நாங்க எங்க தயாரிப்புகளில் கலக்குவதில்லை. இது வரை 120க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்துள்ளோம். எட்டு வகையான சிறு தானியங்களை கொண்டு நூடுல்ஸ், பாஸ்தா, ஃப்ளேக்ஸ், உடனடியாக சமைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் என பல வகையான உணவுப்பொருட்களை தயாரித்து வருகிறோம். இவை அனைத்தும் இந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் தயாரித்து கொடுக்கிறோம். எங்களுடைய பொருட்கள் எல்லாமே ஊட்டச்சத்தினை மையமாக வைத்து தயாரிக்கப்படுகிறது.
மக்களுக்கு சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி குறித்து ஓரளவிற்கு விழிப்புணர்வு இருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் தற்போது அதிகமாக இயற்கை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதே சமயம் இந்த சிறுதானிய வகைகளை எவ்வாறு சமைக்க வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. இதனாலே சிறுதானிய உணவுகள் பயன்பாடு பெருகாமல் இருந்தது. அதற்கு தீர்வாக, சிறுதானியத்தில் உடனடியாக சமைக்கக் கூடிய பொருட்களை கலவையாக தயாரித்து விற்பனை செய்கிறோம்.
உடனடி சமையல் கலவையை பல தரப்பட்ட நிறுவனங்கள் கொடுத்து வந்தாலும் எங்களிடம் இருக்கும் பொருட்களில் சில சிறப்பம்சம் உள்ளது. அதாவது சிறுதானியம் மற்றும் கோதுமை பயன்படுத்தி அதன் ஊட்டச்சத்து குறையாமல் அதிக சத்துடனும் உணவுப் பொருட்களை தயாரிக்கிறோம். உதாரணத்திற்கு முருங்கை கீரையுடன் முளைக்கட்டிய சிறு தானியங்களை கொண்டு தோசை மாவு எங்களிடம் கிடைக்கும். அப்படி நாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தினையும் அதில் உள்ள சத்துக்களையும் கண்டறிய எங்களிடம் எப்பொழுதும் ஒரு குழு உள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனையாகி வரும் எங்களின் சிறுதானிய பொருட்களை, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால் இதில் ஆரம்பத்தில் ஒரு சிக்கலை சந்தித்து வந்தோம். குறிப்பாக வெளிநாட்டிற்கு செல்லும் உணவுகள் குறைந்த காலாவதி நேரம் கொண்டதாக இருந்தது. அதிலும் சிறு மாற்றம் செய்து, தற்போது தயாரிக்கப்படும் பொருட்களின் உபயோகிக்கும் காலத்தை ஒரு வருடமாக அதிகரித்து இருக்கிறோம். இதன் மூலம் குறுகிய கால காலாவதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்’’ என்றவர், வரும் காலத்தில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் கொண்டு பலவித உடனடி சமையல் உணவுகளை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தனர் பிரதீபா தம்பதியினர்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்