தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி 2 பயணிகள் வைத்திருந்த ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடைமேடை 3ல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் இருந்து சந்தேகப்படும்படி பையுடன் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் பையை சோதனை செய்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, பெங்களூர் கவுடா லேஅவுட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) என்பதும், 25 லட்ச ரூபாயை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சந்தேகத்தின் பெயரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒருவர் உரிய ஆவணமின்றி 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பையில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வாசு (42) என்பதும், சென்னை தங்க சாலை தெருவில் கோல்ட் கிப்ட் ஆர்டிகள் தொழில் செய்து வருவதாகவும் இதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.37 லட்சத்தை சென்ட்ரல் ரயில்வே பொறுப்பு ஆய்வாளர் சிவனேசன், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.