தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 1000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்படி, வரும் பயணிகளிடம் திருட்டு கும்பல் செல்போன், பணம், பேக் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கிறார்கள். இப்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமாச்சல் ஒகு (38) என்பவரின் செல்போன் திருடுபோனது. அதிர்ச்சியடைந்த அவர், சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதேபோல் மதுரை மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த அச்சுதன் (45) என்பவரின் செல்போன் திருடுபோனது. இதுகுறித்து, அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில், ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசியதால், போலீசார் அவர்களை சோதனை செய்தபோது, அவர்களிடம் 5 செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் காலியா (30), லித்தன் நாயக் (31), அபயதாகி (31) என்பதும், 3 பேரும் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.