ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய நகராட்சி எதிரே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில், நேற்று முன்தினம் சுமார் அரை அடி அகலத்திற்கு சாலைகள் அமைந்த பீம்கள் நகர்ந்து விரிசல் விட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய மண்டல மேலாளர் வீரேந்திர சாம்பியார் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் ஓசூர் விரைந்து வந்து, மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி. தங்கதுரை மற்றும் கிருஷ்ணகிரி கோபிநாத் எம்.பி., உள்ளிட்டோரும் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய மண்டல மேலாளர் வீரேந்திர சாம்பியர் கூறியதாவது: இந்த மேம்பாலம், 2002ம் ஆண்டு கட்டப்பட்டது. பேரிங்குகள் தாங்கும் இடத்தில் மட்டும் நகர்வு நடந்திருக்கிறது. ஆய்வு மேற்கொண்டதில், கட்டமைப்புக்கு எந்த சேதாரமும் இல்லை. பேரிங்குகள் மட்டும் தான் மாற்றப்பட வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்குள், இதற்கான பணிகள் துவங்கி நிறைவடையும்.
இந்த பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள நான்கு பேரிங்குகளும் மாற்றி அமைக்க அதிகபட்சமாக ஒரு மாதம் ஆகலாம். அதற்கு பின்பு நிரந்தர தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.