Saturday, April 20, 2024
Home » நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் ரவி அவமானப்படுத்தி விட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் ரவி அவமானப்படுத்தி விட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

by Karthik Yash

சென்னை: நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமானப்படுத்தி விட்டார். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தியதுடன், தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்னைத் தமிழ்மொழிக்கு இனிய வணக்கம். பார்போற்றும் வகையில் மூவேந்தர் கொடிகட்டி ஆண்ட தமிழ்நாட்டுக்குக் கம்பீர வணக்கம். இறுதிமூச்சு இருக்கும்வரை சுயமரியாதை சுடரொளியாக சுற்றிச்சுழன்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு திராவிட வணக்கம்.

இனம் காக்க, 75 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக என்ற மாபெரும் பேரியக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவுக்கு அன்பான வணக்கம். ஐம்பது ஆண்டு காலம் இயக்கத்தை நடத்தி, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, எங்களை எல்லாம் உருவாக்கிய தமிழின தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு கனிவான வணக்கம். ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல; கொள்கையை செயல்படுத்தும் ‘களம்’ என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் அண்ணாவும், கலைஞரும். ‘இன்னார்க்கு மட்டுமே இன்னது’ என்பதை மாற்றி ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் பெரியார். அதனை ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் அண்ணாவும், கலைஞரும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன காலச் சிந்தனைகளுடன் இணைத்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியை உங்கள் அனைவரது பேராதரவுடன் நான் நடத்தி வருகிறேன்.

நான் என்றால், தனிப்பட்ட நான் அல்ல; அப்படி எப்போதும் நான் கருதியது இல்லை. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று நான் பொறுப்பேற்கும்போது, அந்த சொல்லை உச்சரித்தேன். உச்சரிக்க வைத்தவர்கள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டு மக்கள். அந்த தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறேன். என் மனச்சாட்சிப்படி நான் செயல்பட்டு வருகிறேன். எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு உண்மையாக நான் ஆட்சி செய்து வருகிறேன்.

ஆண்டின் தொடக்கத்தில், கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் 2024-2025க்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்து தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் அவர்கள் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.

இது, எங்களை அல்ல; நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா? எங்களை பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். ‘‘தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு ‘‘ என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்..” நான் ஸ்டாலின், அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பாசிசத்தை – எதேச்சதிகாரத்தை – இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டு செயல்களை பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன். எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்” என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில். இவ்வாறு அவர் பேசினார்.

* இன்று வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்கி வருகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழும், தமிழ்நாடும், பெரியாரும், அண்ணாவும், கலைஞரும்தான் எங்களை எந்நாளும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்திகள். ஐந்தும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதால்தான், உற்சாகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நாம் அடைய, இந்த உன்னத தலைவர்கள் போட்டுத் தந்த வழித்தடம்தான் அதற்கு காரணம். திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ‘‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. ‘‘ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, ‘‘தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது” என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழ்நாட்டிற்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான்” என்று கூறினார்.

You may also like

Leave a Comment

nine − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi