Saturday, September 21, 2024
Home » நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் நாணயம் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் நாணயம் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

by Arun Kumar

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், கலைஞர் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து கலைஞர் பற்றிய சிறப்பு காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை அனைவரும் கண்டு ரசித்தனர். அதன் பிறகு கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 100 ரூபாய் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞரின் கையெழுத்துடன் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. ‘நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை. தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவர் கலைஞரது திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி திறந்து வைத்தார். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இன்று தமிழினத் தலைவர் கலைஞரின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட வருகை தந்துள்ளார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞரின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான். 80 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் இயங்கி, அதில் அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் கலைஞர் நிறைவடைந்த நாள்முதல், நாள்தோறும் அவர் புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்தப் பெருமைக்கெல்லாம் மகுடமாக, இன்று கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.

தலைவர் கலைஞரை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசுக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார். இயற்பியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர், அரசியலில் ஆர்வம் மற்றும் கடின உழைப்பால், படிப்படியாக வளர்ந்து, எம்எல்ஏவாக இருந்து மாநில அமைச்சராகி உத்தரபிரதேச முதல்வராகவும், தற்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் உயர்ந்துள்ளார்.

இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, தலைவர் கலைஞர் தான். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது.
அவரது சாதனைகளைச் சொல்ல, இதோ நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே, இந்த கலைவாணர் அரங்கத்தில் இருந்தே தொடங்கலாம். பாலர் அரங்கமாக இருந்த இதனை, மிகப்பெரியதாகக் கட்டி எழுப்பி, ‘கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றினார். தாய்மொழியாம் தமிழ்மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றுத் தந்தார். மெட்ராசை ‘சென்னை’ ஆக்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் – போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார்.

44 அணைக்கட்டுகள் ஏராளமான கல்லூரிகள்-பல்கலைக் கழகங்கள். சென்னையைச் சுற்றி மட்டும் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், கத்திபாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழிப்பூங்கா, டைடல் பார்க், தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை, மெட்ரோ ரயில், அடையாறு ஐ.டி. காரிடார், நாமக்கல் கவிஞர் மாளிகை என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. இதனை யாராலும் மறைக்க முடியாது.

கடந்த 15ம் நாளன்று இந்திய நாட்டின் 78வது விடுதலை நாளைக் நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதல்வர் கலைஞர் தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே, ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்’ – என்று, அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர். அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.

‘செயல்படுவதும், செயல்பட வைப்பதும்தான் அரசியல்’ என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவராக; ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக; எப்போதும் சிந்தித்தார், செயல்பட்டார். 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம், 1972ம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிலம், 1999ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம்ம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கியவர் தலைவர் கலைஞர். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில்-நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கலைஞர் .

நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான். ‘சொன்னதைச் செய்வோம்-செய்வதைத்தான் சொல்வோம்’ என்று சொல்லி, சொன்னதையெல்லாம் செய்து காட்டியது, தலைவர் கலைஞர் அவர்களது நாணயத்துக்கு அடையாளம். அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு – கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது.

“சட்டசபையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும்’’ என்றார் தந்தை பெரியார். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது, எனது அரசல்ல; நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு. திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு. இதனை என்னுள் ஏற்படுத்தியவர் தலைவர் கலைஞர். அந்த வகையில் கலைஞரே இயக்கிக் கொண்டிருக்கிறார். “ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான். தனது சாதனைப் பெருவாழ்வால் தமிழினத்தின் நெஞ்சத்தில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவிஞர் வைரமுத்து, மேற்கு வங்க மாநில முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணன் காந்தி, கவிஞர் வைரமுத்து, மு.க.தமிழரசு, செல்வி, தூர்கா ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினார்.

* கலைஞர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மலர் தூவி மரியாதை

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல் படை தனி விமானத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு சென்னை விமான நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள, கடலோர காவல் படை விமான தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு வந்தார்.

அங்கு கடலோர காவல்படைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதன்பின், கலைஞர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள கலைஞரின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

* இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞரின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான்.

* எண்பது ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் இயங்கி, அதில் அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

You may also like

Leave a Comment

10 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi