புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் 14 கோடி பேருக்கு கடந்த 2 ஆண்டாக ரேஷனில் வழங்கப்படும் உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்குவது பற்றி அரசியல் சட்டத்தின் 21வது பிரிவில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 67 % இந்தியர்கள் ரேஷனில் உணவு பொருள்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 95 கோடி பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது 81 கோடி மக்களுக்குதான் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளர்கள் சேர்க்கப்படாமல் 2 ஆண்டுகளாக 14 கோடி பேருக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை செயலற்ற,திறனற்ற ஒன்றிய அரசு கடந்த 2021 ம் ஆண்டு நடத்தாததுதான் இந்த நிலைமைக்கு காரணம்.
ஜி-20 அமைப்பில் உள்ள இதர நாடுகளான இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. இந்தியாவில 1951ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தவறாமல் நடந்து வந்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னும் இதை நடத்தாமல் இருப்பது வரலாற்றில் இல்லாத மிக பெரிய தோல்வி. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிகளின் சமூக பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பையும் அரசு மறைத்துள்ளது. மேலும் பீகார் அரசு நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜ அரசு வாதாடியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், பிற்பட்ட சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களின் நிலையை அறியாமல் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஏற்படுத்த இயலாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
* ஞானவாபி மசூதி ஆய்வுக்கு கூடுதல் கால அவகாசம்
வாரணாசி: வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஞானவாபி என்ற மசூதி வளாகம் அமைந்துள்ளது. அது முன்னதாகவே அங்கு இருந்த இந்து கோவிலின் மீது அமைக்கப்பட்டதாகவும், அதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆய்வுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மொத்தம் 4 வாரம் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறை துறை மசூதி வளாகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. ஆய்வுக்கான காலக்கெடு கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் கால அவகாசம் கேட்டு வாரணாசி மாவட்ட கோர்ட்டில் தொல்லியல் துறை மனு செய்தது. இதை ஏற்று மேலும் 8 வார காலத்திற்கு ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிபதி காலஅவகாசம் வழங்கினார்.