இ ந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டவும், வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு கொண்டு செல்வதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். சாதி தொடர்பான தரவு, உள்ளீடுகளை கொண்டே சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட முடியும். இட ஒதுக்கீட்டில் ‘உள் ஒதுக்கீடு’ விவகாரங்களில் ஒரு தெளிவினை பெற முடியும். ஒரு மாநிலத்தில் அதன் தாய்மொழி பேசுவோர் எத்தனை சதம் உள்ளனர், பிற மொழி பேசுவோர் அங்கு எத்தனை சதம் வாழ்கின்றனர் என்பதை சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் கண்டுணர முடியும். சாதி வாரியான கணக்கெடுப்பு இந்திய அளவில் எடுக்கப்பட்டால் மட்டுமே, இன்ன சாதிக்கு விகிதாச்சார அடிப்படையில் இவ்வளவு இடஒதுக்கீடு என்பதை உணர்த்திட இயலும். மேலும் வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கும் கூட கணக்கெடுப்பு அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை 1931ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இக்காலக்கட்டத்திற்குள் நம் நாட்டின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார நிலப்பரப்பு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இன்னமும் பின்தங்கிய நிலையிலே உள்ளனர். பீகார் போன்ற சில மாநில அரசுகள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளன. பீகாரின் சாதி வாரி கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 36 சதவீதம் அங்கு உள்ளனர். ஆனால், ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, இந்தியாவின் சாதி புள்ளி விபரங்களை வைத்து ‘அதிக மக்கள்தொகை, அதிக உரிமைகள்’ என்பதை கொண்டு வரவேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சொற்ப எண்ணிக்கையில் இருப்பவர்கள் அதிகாரங்களை அனுபவித்து வருவதும், திரளாக இருப்பவர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில், சமூகத்தில் அந்தஸ்து கிட்டாமல் இருப்பதும் உண்மை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சமூக, பொருளாதார தரவுகள் சேகரிக்கப்பட்டாலும், சாதிவாரியான விபரங்கள் பெறப்படவில்லை. இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு செல்லவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறவும் சாதி வாரியான துல்லியமான கணக்கெடுப்புகள் இப்போது தேவையாக உள்ளது. இந்தியாவில் 2021க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னமும் நடைபெறவில்லை. விரைவில் நடக்க உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பல மாநிலங்களும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் இந்திய சட்டபூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான பொருத்தமான தளமாக இருக்கும். இதன்மூலம் சமூகத்தின் சாதி அமைப்பு மற்றும் சமூக பொருளாதார விழுமியங்களை நாம் நேரடியாக பெறுவதோடு, விரிவான, நம்பகமான தகவல்களையும் பெறலாம்.