புதுடெல்லி: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ல் தொடங்கப்பட்டு, 1881ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2011ல் நடைபெற்ற 15வது கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. 2021ல் நடத்தப்பட வேண்டிய 16வது கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஒன்றிய அரசு 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு தழுவிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான, வீடுகளைப் பட்டியலிடும் பணி அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் முதல் கட்டமாகும். இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தப் பணியின் முதல் கட்டத்தில், கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று, அந்த வீட்டின் கட்டமைப்பு, அங்குள்ள வசதிகள், குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் போன்ற தகவல்களைச் சேகரிப்பார்கள். பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இரண்டாம் கட்டப் பணிகள் வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி தொடங்கும். இந்தக் கட்டத்தில்தான் மக்கள் தொகை, அவர்களின் சமூக-பொருளாதார நிலை, கல்வி, கலாசாரப் பின்னணி போன்ற மிக விரிவான தகவல்கள் சேகரிக்கப்படும்.
குறிப்பாக, இந்த முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான பணிக்காக நாடு முழுவதும் 34 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும், 1.3 லட்சம் துணைப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக இந்திய தலைமைப் பதிவாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆயத்தப்பணிகள், பணியாளர்கள் ஒதுக்கீடு, திட்ட வரன்முறை உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, மக்களாட்சி தொகுதிகளை வரையறுக்கவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்கவும் முக்கியமான தரவுகளை வழங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு குடிமக்கள் தேவையான தகவல்களை பிழையின்றி வழங்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாகும், மேலும் தவறான தகவல்கள் அளிப்பது தண்டனைக்கு உள்ளாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.