சென்னை: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வேறுபாடின்றி சமூகநீதியை அடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுக்கவேண்டியது ஒன்றிய அரசே என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் நிலை. 2021 ஆம் ஆண்டிலேயே ஒன்றிய பி.ஜே.பி. அரசு எடுக்கவேண்டிய சென்சசை, இதுவரை எடுக்காதது ஏன்? ஜாதி உள்பட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுத்தால்தான் சமூகநீதி காப்பாற்றப்பட முடியும். எல்லோ ரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கதவைத் தட்டுவோம் – மாநில அரசைக் குறைகூறுவது வெறும் அரசியலே என்று அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தியாகவேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள்படியான ஆணையாகும். 2021 ஆம் ஆண்டிலேயே ஒன்றிய பி.ஜே.பி. அரசு சென்சஸ் எடுத்திருக்கவேண்டும். 2011 இல் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை யில் ஜாதிப் பிரிவும் கேட்கப்பட்ட நிலையில், அதை சரிவர பதிவு செய்யாதமையால், முந்தைய ஆயிரக்கணக்கான ஜாதிகள் சில லட்சங்களாகிவிட்டன என்பது போன்ற தவறான (ஊதல்கள்) குறிப்புகளால் அந்தக் கணக்கெடுப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது!
2021 இல் பா.ஜ.க. ஆட்சியில் (மோடி ஆட்சி) இதை அடுத்த பத்தாண்டு கணக்கெடுப்பு – என்ற முறையில் நடத்தியிருக்கவேண்டும்.
கரோனா (கோவிட்–19) முதலியவற்றினால் அதை நடத்தாமல், அதைச் சாக்காகக் கூறி, அரசு தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த நிலையில், இந்த 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகாவது இப்போது அப்பணியைத் தொடங்கவேண்டியது அரசமைப்புச் சட்டப்படியும் முக்கியமானதாகும். சமூகநீதி செய லாக்கத்திற்கு அடிப்படைத் தேவையான புள்ளி விவரமும் சரியான முறையில் பெறப்படும். எனவே, இந்த 10 ஆண்டுகள் சென்செஸ் முக்கிய தேவையாகும்.
1. ‘‘ஜாதி’’ என்ற பிறவி பேத முறை உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு கொடுமை என்பதாலும், பெரும்பான்மையினரான ‘‘கீழ்ஜாதியார்’’ – ஒடுக்கப்பட்ட வகுப்பினர்கள் கல்வி, உத்தியோக, உரிமைகளை இழப்பதோடு, தங்களது மானம், மரியாதையையும் இதன்மூலம் இழந்து, விலங்கினத்தைவிடக் கீழான பிறவிகளாகவே ஹிந்து மத சாஸ்திரப்படி, சமூக வழக்கப்படி இன்னமும் தீண்டாமை, பாராமை, நெருங்காமை, படிக்காமை – இன்னல்களிலிருந்து மீள சமூகநீதி, இட ஒதுக்கீடு ஒரு வழிமுறையாக உள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாததாக உள்ளது!. ஜாதியைக் கேட்டு, அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியாததினாலேயே, ஜாதி ஒழிந்து விடுமா? இது ஒரு ‘நெருப்புக்கோழி‘ மனப்பான்மை – ஏமாற்று வித்தையல்லவா?. இந்தப் பிறவிக் கொடுமை – பேதம் – பாதிப்பிலிருந்து அந்த மக்களை மீட்கவே ஒரு உபாயம் – இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டம் அளிக்கும் சமூகநீதி!. சமூகநீதி வழக்குகளில் உச்சநீதிமன்றம் தரவுகளைக் கேட்கிறதே!
மாநில அரசுகள் அதற்கான இட ஒதுக்கீடு சட்டங்களை செய்து, செயல்படுத்தி வருகையில், ஆதிக்க ஜாதியினர், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைப் போட்டு, விசாரணைக்கு அவை வரும்போது, ‘Quantifiable data‘ வின்படி கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதற்கு எங்கே என்று ஒரு குறுக்குக் கேள்வி கேட்டு, அம்முயற்சிகளை – சமூகநீதிச் சட்டங்களை – கைக்கெட்டியவை வாய்க்கெட்டாதவைகளாக ஆக்கி விடுவதாலேயே, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி பதிவு செய்யப்படவேண்டியது – அவசர அவசியமாகும்.
அதற்குரிய காரணங்கள்,
1. ‘‘ஜாதி’’ என்பது யதார்த்தம் – நடைமுறையில் உள்ளது.
2. பிறந்ததிலிருந்து சுடுகாடு, இடுகாடு வரை மட்டுமல்ல, அதற்கும் தாண்டியும்கூட ஜாதி ஆளுமை செய்கிறது!
3. ‘ஜாதி‘ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒழிக்கப்படவே இல்லை என்பதோடு, 18 இடங்களில் அரசமைப்புச் சட்டத்தில் அந்த Caste என்ற சொல் இடம்பெற்றுள்ளது!
தமிழ்நாட்டிலும், ஜாதி வாரிக் கணக்கெடுப்பை திராவிடர் கழகமும், திராவிடர் இயக்கமும், ‘திராவிட மாடல்’ ஆட்சியும், முதலமைச்சரும், கூட்டணிக் கட்சிகளும், சமூகநீதிப் போராளிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், மக்களவையின் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்!
பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகளே மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றனவே!
மைனாரிட்டி அரசாக மூன்றாவது முறை ஒன்றி யத்தில் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) – அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளில் முக்கியமானதான நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி போன்ற வையும் வற்புறுத்தி வருகின்றன!
எனவே, இந்தக் குரல்களுக்கும் காது கொடுத்து, உடனடியாக மேலும் காலதாமதம் செய்யாமல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திட, ஒன்றிய மோடி அரசு முன்வரவேண்டியது அரசமைப்புச் சட்டப்படி உள்ள முக்கிய கடமையாகும்!. ஏற்கெனவே ஒன்றிய மற்றும் மாநிலங்களில் ஜாதிப் பட்டியல்கள் உள்ளன. அவற்றில் எந்த ஜாதி என்று கேட்டால் போதும். புதிது புதிதாக ஜாதிகள் முளைக்காது; தவறான தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை என்றும்கூட அரசு ஆணையிடலாம்.
இந்தக் கணினி யுகத்தில், பணிகளை விரைந்து செய்ய முடியும். எனவே, உடனே என்ன ஜாதி (Caste) என்று கேட்டு, அந்தக் கணக்கெடுப்பை ஒரு காலக்கெடு வுக்குள் (Time Bound) திட்டமாக முடிக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும்.
ஒன்றிய அரசின் கதவைத் தட்டவேண்டுமே தவிர,மாநில அரசையல்ல!
தமிழ்நாடு தி.மு.க. அரசின்மீது குற்றம் சாட்டவே அரசியலில் தோற்றுப்போன சில தலைவர்கள், மாநில அரசை ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வற்புறுத்திப் பேசுகின்றனர். முறையாக தட்டவேண்டிய கதவு அவர்களிடம். அவர்கள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகும்.
கருநாடகாவில் 2015 ஆம் ஆண்டிலும், பீகாரில் 2023 ஆம் ஆண்டிலும் மாநில அரசுகள் செய்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்த பிறகும், வற்புறுத்தவேண்டியது ஒன்றிய அரசைத்தான் – தாங்கள் ஆதரவு தரும் அந்தப் பிரதமர் மோடி தலைமையிலான அரசைத்தான் என்பதை உணரவேண்டாமா?
ஒன்றிய அரசை வலியுறுத்திஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்!
சமூகநீதியாளர்கள் அனைவரும் – ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற அணி வேறுபாடு பார்க்காமல், சமூகநீதி என்ற இலக்கை அடைய, இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வைத்துப் போதிய அழுத்தம் கொடுத்தால்தான் வெறும் ‘கானல் நீர் வேட்டை‘ மாறி, காரியத்தில் செயலாக மலர முடியும்!
எனவே, ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்; கொடுக்கவேண்டும், வேண்டும் உடனடி ஒன்றிய அரசின் சென்சஸ் கணக்கு! அதில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியம் – முதன்மையாகும் என்று முழங்கிட, மக்கள் மன்றம் கிளம்பட்டும்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.