சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமான கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தினை செயற்படுத்த நிர்வாக ஒப்புதலும், இதற்கென தமிழ்நாடு முழுமைக்கும் ரூ.1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி) நிதி ஒப்பளிப்பு செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தில் இயங்கும் கிறித்துவ சமுதாயத்தினருக்கான கல்லறை தோட்டம் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் மற்றும் புனரமைத்தலுக்கு தமிழக அரசின் நிதியுதவி வேண்டுவோர், இப்பணிக்குரிய செலவினம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களிடமிருந்து பெறப்பட்ட திட்ட மதிப்பீட்டுடன் விண்ணப்பத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 6வது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அளித்து பயனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் முதலில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், சம்பந்தப்பட்ட வட்டத்தின் வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவால் நேரடி ஆய்வு செய்யப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் நிதி ஒதுக்கீடு கோரி சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதியுதவி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.