தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து பெண் மண்டை உடைந்தது
திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பு மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து பெண் மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் அடுத்த டிஎம்சி காலனி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் நகராட்சியில் 20 ஆண்டுகளாக முருகேசன் மனைவி சரசு(50) தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது குடியிருப்பின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் சரசு மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரசுவிற்கு சுமார் 20 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
